7 மாதங்களாக ஆசிரியர் இன்றி தவிக்கும் தரம் 3 மாணவர்கள்: புதுக்குடியிருப்பில் பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டம்



முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்பப் பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த ஏழு மாதங்களாக நியமிக்கப்படாத நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் இன்று (28) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஆசிரியர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்பி மாணவர்களின் கல்வி பாதிப்பைத் தடுக்க கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.

தரம் 3 வகுப்பில் கல்வி கற்கும் 36 மாணவர்கள் கடந்த ஏழு மாதங்களாக வகுப்பாசிரியர் இன்றி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், அவர்களின் ஆரம்பக் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் சுட்டிக்காட்டினர்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் முல்லை கல்வி வலய அலுவலகத்துக்கு பலமுறை முறையிட்ட போதிலும், இதுவரை எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியர் ஒருவரை உடனடியாக நியமித்து மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இந்த நிலை நீடித்தால் மாணவர்களின் அடிப்படைக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், உரிய அதிகாரிகள் தாமதமின்றி தீர்வை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் வலியுறுத்தினர்.