சிங்கள மக்களை ஏன் இப்படிப் பழிதீர்க்கிறீர்கள் ? , நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் – சீலரத்ன தேரர்


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் கைதிகளின் மரணங்களுக்குப் பொறுப்பேற்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். போதைப்பொருள் மாஃபியாவை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று சிங்கள மக்களைப் பழிவாங்கி வருகிறது என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் கைதிகளின் மரணங்கள் குறித்த விபரங்களை நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகவே ஒரு மணித்தியாலங்களுக்குப் பின்னர் அறிந்துகொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் சட்டம் பேசும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு சிறிதேனும் வெட்கம் இருக்குமானால், இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை விட்டு உடனடியாக விலக வேண்டும்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் அப்பாவி சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர்களும் கொல்லப்பட்டுள்ளார். சிறைச்சாலைக்குள் பல நாட்களாக கைதிகள் டெங்கு நோயால் மரணமடைந்து கொண்டிருந்த போதும் அவர்களுக்கு ஒரு மருந்து மாத்திரையேனும் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் அமைச்சினால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது ஏன்? நாட்டில் போதைப்பொருள் மாஃபியாவை 100 வீதம் ஒழித்து, சிங்கள இனத்தையும் ஏனைய ஒட்டுமொத்த குடிமக்களையும் பாதுகாப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் அதிகாரத்தைப் பெற்ற பின்னர் பித்துப் பிடித்தவர்கள் போல் மாறி, சிங்கள மக்களை ஏன் இப்படிப் பழிதீர்க்கின்றீர்கள் என நான் கேட்க விரும்புகின்றேன். ஜனாதிபதி அவர்கள் உடனடியாக தலையிட்டு, இவ்வாறான தகுதியற்ற அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கி, தகுதியான ஒருவரை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக நியமிக்க வேண்டும்.

தற்போது சிறைச்சாலை திணைக்களத்தை வழிநடத்தும் அதிகாரி தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குரிய அதிகாரங்களை முழுமையாக வழங்கி, அவரை நிரந்தர சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்க இந்த அரசாங்கத்துக்;கு இருக்கும் தடை என்ன? அரசாங்கத்துக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சி மற்றும் பேராசை காரணமாகவே தகுதியான அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படுவதில்லை.

இதனால் சிறைச்சாலை நிர்வாகம் முற்றிலும் முடங்கி, அதிகாரிகள் எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாமல் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது, ஒவ்வொரு கைதியின் உயிரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என தற்போதைய ஆட்சியாளர்கள் அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பாராளுமன்றத்தில் முழக்கமிட்டனர்.

இந்த அரசால் வீதிகளில் மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத அளவுக்கு பெருகியுள்ள ஆயுதக் கலாசாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாட்டு சக்திகளினதும் புலம்பெயர் அமைப்புகளினதும் தேவைக்கேற்ப நாட்டை ஆள்வதற்காகவே அநுரகுமாரவின் அரசாங்கம் கொண்டு வரப்பட்டது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கை நாட்டிற்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி அவர்கள் உடனடியாக ஒரு விசேட குழுவை நியமித்து, இந்தச் சிறைச்சாலை படுகொலைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணையை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.