நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் யோசனைக்கு சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக எதிர்ப்பு




நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது முழுமையான எதிர்ப்பை ஒருமனதாகத் தெரிவித்துள்ளதுடன், சட்டச் சமூகம் இந்த நகர்வுக்குக் கடுமையாக எதிராக உள்ளதாக அதன் தலைவர் ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்க வளாகத்தில் இன்று (29) காலை நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜீவ் அமரசூரிய, இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்ட அனைத்து சட்டத்தரணிகளும், இணையவழியில் பங்கேற்றவர்களும் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறினார்.

இந்த முன்மொழிவுக்கு நீதிபதிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இந்நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தார்.