தேரவாத புத்த தர்மத்தைப் பாதுகாக்கும் நாடாகவே இலங்கை உலகில் தனித்துவம் பெற்றுள்ளது – களனி பல்கலைக்கழக வேந்தர் நாரம்பனாவே ஆனந்த தேரர்


உலகளவில் இலங்கை இன்றளவும் ஒரு தனித்துவமான சிறப்பிடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்குத் தேரவாத புத்த தர்மத்தைப் பாதுகாத்து வரும் நாடு என்பதே முக்கிய காரணமாகும் என களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தரும், அஸ்கிரிய மகா விகாரையின் அநுநாயக்கருமான நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய காலகட்டத்தில் தலைமைத்துவப் பதவிகளுக்கான பெயர்களைக் கொண்ட பலர் வாழ்கின்ற போதிலும், அவர்களிடம் உண்மையான தலைமைத்துவப் பண்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

இதுவே தற்போதைய சமூகத்திலும், துறவற சமுதாயத்திலும் காணப்படும் மிகப்பெரிய பிரச்சினையாகும். எனவே, துறவிகளுக்குக் கிடைக்கப்பெறும் பதவிகள் மற்றும் பொறுப்புகள் என்பன அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வழங்கப்படுவதில்லை. அப்பதவிக்குரிய சாசனப் பணிகளையும் கடமைகளையும் சரியாக நிறைவேற்றுவதற்கே வழங்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் புத்தசாசனத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களும் குழப்பங்களும் உருவாகியுள்ளன என்பதை அண்மைய பிரச்சினைகள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

இது தொடர்பாக நமது புத்தசாசன அமைச்சரும் கருத்து வெளியிட்டிருந்தார். தற்போதைய புத்தசாசன அமைச்சராக அவர் இவ்வாறானதொரு கூற்றை வெளியிட்டமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எனவே, தலைமைத்துவப் பொறுப்புகளை வகிக்கும் மகா சங்கத்தினருக்கு மட்டுமன்றி, அரசாங்கத்துக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தற்போதைய சாசன நெருக்கடிகளைச் சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.

அவ்வாறு இல்லையெனில், நமது முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்த இந்த உன்னத புத்தசாசனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

அத்தகைய பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தீவில், நமது முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட இந்தச் புத்த சாசனத்தை எதிர்காலத்துக்குத் தடையின்றி எடுத்துச் செல்ல வேண்டுமாயின், தற்போதைய சவால்களை நாம் சரியாக அடையாளம் காண வேண்டும்.

இன்றைய சூழலில் ஒருபுறம் தர்மத்தைத் திரிபுபடுத்திப் பிரசங்கிக்கும் போலித் துறவிகள் பலர் உருவாகியுள்ளனர். புத்த தர்மத்தின் மிகவும் மதிப்புமிக்க போதனைகளையும், அதன் சாராம்சங்களையும் தங்களின் தன்னிச்சையான விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப திரிபுபடுத்தியும் மாற்றியும் இவர்கள் பிரசங்கம் செய்து வருகின்றனர்.

சில நேரங்களில் நமது உன்னதமான சாசன நெறிமுறைகளைக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுடன், மகா சங்கத்தின் தலைமைத்துவத்துக்குக் கீழ்ப்படியாமல் செயற்படும் ஒரு போக்கு இன்று சமூகத்தில் உருவாகியுள்ளது.

இவ்வாறான பல சவால்கள் நிலவும் ஒரு காலகட்டத்தில், அறிவாற்றலும், ஒழுக்கமும், சாசனப் பற்றும் கொண்ட துறவிகள் நமது முதன்மைப் பீடங்களுடன் இணைந்து, இச்சாசன நெருக்கடிகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான பாரிய பொறுப்பை ஏற்றுச் செயற்பட வேண்டும் என்றார்.