வீடு, காணி வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி – தனியார் நிறுவன பணிப்பாளர் கைது
எளிய தவணை முறையில் வீடு மற்றும் காணி வழங்குவதாக வாக்குறுதி அளித்து பொதுமக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் குறித்த திட்டத்தை விளம்பரப்படுத்திய சந்தேகநபர், குறைந்த தவணை முறையில் வீடு மற்றும் காணி பெற்றுத் தருவதாக மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
அதன்படி, வாடிக்கையாளர்களிடம் ஒப்பந்தங்களில் கையொப்பமிடச் செய்து, வீடு மற்றும் காணியின் மொத்த பெறுமதியில் 60 சதவீத முன்பணத்தை செலுத்துமாறு கோரியுள்ளார்.
எனினும், முன்பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியளிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கவோ அல்லது வழங்கவோ தவறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் பணத்தைத் திருப்பிக் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளும் வங்கியில் பணமாக மாற்ற முடியாதவையாக (Dishonoured Cheques) இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை ஐந்து முறைப்பாடுகள் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளதுடன், மேலும் பல பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கும் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
சந்தேகநபர் ஜூலை 28 ஆம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





.jpg)




.jpg)



