தேவிநுவரை உத்த்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹெராவில் இன்று (28) பங்கேற்ற சில காவடியாட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், விசேட பாதுகாப்பு சோதனையின் போது போதைப்பொருளுடன் பிடிபட்டதைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக சுமார் 1,500 பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பங்கேற்கும் அனைத்து காவடியாட்டக் குழுக்களும் உடனடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவடியாட்டக் குழுக்கள் தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதாள உலகக் குழுத் தலைவர்கள் இருவருக்கிடையிலான மோதல் ஆலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டாக வெடித்ததை அடுத்து, காவடியாட்டக் குழுக்களின் பங்கேற்பை தற்காலிகமாக நிறுத்துமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் மா அதிபர் (IGP) பரிந்துரைத்திருந்தார்.
எனினும், நேற்று (27) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடலின் பின்னர், முந்தைய ஆண்டுகளில் காவடியாட்டத்தில் பங்கேற்ற அனைத்து குழுக்களும் இவ்வாண்டும் ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.




.jpg)





.jpg)


