இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறையை விளக்கிய இந்திய உயர்ஸ்தானிகரகம்



இந்தியா பயணம் செய்யும் இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்றும், தகுதி வாய்ந்த யாத்திரைக் குழுக்களுக்கு தொடர்ந்து இலவச (Gratis) விசாக்கள் வழங்கப்படுகின்றன என்றும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் பிரஜைகளுக்கான விசாக்கள் தொடர்ந்து விரைவாக வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவின் இ-விசா (e-Visa) சேவையையும் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையுடன் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட யாத்திரைக் குழுக்களுக்கு, புத்த மத புனிதத் தலங்கள் உள்ளிட்ட இந்திய யாத்திரைகளுக்காக இலவச விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா சேவை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த இலவச விசா நடைமுறை, புதிய சேவை வழங்குநர் கடந்த ஜூலை 7 முதல் பணியை ஆரம்பித்ததைத் தொடர்ந்து மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்திய துணைத் தூதரக விண்ணப்ப மையத்தின் (ICAC) சேவைக்கட்டணமாக விண்ணப்பதாரர்கள் ரூ.1,855 செலுத்த வேண்டியிருக்கும் என்றும், 12 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.