பாதாளக் குழுக்கள் என்றாலே ராஜபக்ஷர்களின் தொடர்பு இருக்கும் – சுனில் வட்டகல



சிறைச்சாலைகளில் போதுமான வசதிகள் இல்லை என்று நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தை கருத்திற் கொண்டு புலம்புவது நியாயமானதே,பாதாள குழுக்கள் என்று குறிப்பிடும் போது ஏதாவது ஒரு வழியில் ராஜபக்ஷர்கள் தொடர்புப்பட்டிருப்பார்கள்.அது தான் உண்மை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைகளை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். அவை ஒருபோதும் வெற்றிப்பெறாது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை தடுக்க நீதியமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டுகிறார். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதியமைச்சர் விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.இதில் மறைக்க வேண்டிய ஒன்றும் கிடையாது.

பாதாள குழுக்கள் என்று குறிப்பிடும் போது ஏதாவது ஒரு வழியில் ராஜபக்ஷர்கள் தொடர்புப்பட்டிருப்பார்கள்.அது தான் உண்மை. தங்காலை சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட ஜூலம்பிட்டியே அமரேவை பார்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக சென்றார் ' அமரே நான் வந்து விட்டேன். கலவரத்தை நிறுத்து' என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஜூலம்பிட்டியே அமரே கலவரத்தை உடனடியாக நிறுத்தி விட்டார். நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைக்கு சென்று மஹிந்தவை போன்று எவரையும் பெயர் குறிப்பிட்டு எந்த பாதாள குழு உறுப்பினரையும் அழைக்கவில்லை.

சிறைச்சாலைகளில் போதுமான வசதிகள் இல்லை என்று நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தை கருத்திற் கொண்டு புலம்புவது நியாயமானதே. சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.