2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,995 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்களால் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகள் மற்றும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்தமை ஆகியவை இறக்குமதிச் செலவு உயர்வதற்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். எரிபொருள் இறக்குமதி அளவு அதிகரித்தமையும் இதற்கான மற்றுமொரு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தால் பொருட்களின் விலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்ந்ததாகவும், 2026 ஏப்ரல் முதல் பணவீக்க அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதனைக் கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதிக்கான நிதி ஏப்ரல் மாதத்தில் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சக்தி மானியங்களுக்கு 15.3 பில்லியன் ரூபா, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்கு 8.5 பில்லியன் ரூபா, உர மானியங்களுக்கு 6.3 பில்லியன் ரூபா மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட ஏனைய மானியங்களுக்கு 12.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





.jpg)

.jpg)


.jpg)

