22ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு


அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி இதுவரையில் 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கிடைக்கப்பெற்ற 7 பிரதிகளுக்கு மேலதிகமாக, இந்த இரண்டு மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சபாநாயகருக்கு மூன்று மனுக்களின் பிரதிகள் கிடைத்திருந்தன.

இதற்கமைய வியாழக்கிழமை (20) மேலும் 4 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்கு கிடைத்திருந்தன.

இதற்கமைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி 09 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.