இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ கஞ்சா கைப்பற்றல் : இருவர் கைது


இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதிக்கு வேனில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா பொட்டலங்களை இன்று சனிக்கிழமை (08) இராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பிரப்பன்வலசை கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த வேன் ஒன்றைச் சோதனையிட்டனர். இதன்போது வேனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 297 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த களஞ்சீஸ்வரன் ஆகிய இருவரைக் கைது செய்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வேனுடன் அவர்களை இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், இக்கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் ஆந்திர மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை என்பதும், பிரப்பன்வலசை கடற்கரையிலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:

இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 212 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 670 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ 800 கிராம் மெத்தம்பெட்டமைன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.