.jpg)
இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ள போதிலும், நாட்டில் வேலையின்மை பிரச்சினை தொடர்ந்து நிலவுவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதுடன், ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அந்தப் பணியிடங்களுக்குப் பொருத்தமான தகுதியும் தொழில்நுட்பத் திறனும் கொண்ட ஊழியர்களைக் கண்டறிவதில் நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறினார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாகவும், தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் 49.2 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வேலை தேடுபவர்களிடம் காணப்படும் திறன்களுக்கும் தொழிற்துறையின் உண்மையான தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியே தற்போதைய நிலைமைக்கு பிரதான காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, காலியாக உள்ள பல பணியிடங்களுக்குத் தேவையான தொழிற்தகைமை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் வேலையற்றவர்களிடம் இல்லாத நிலை காணப்படுவதாக அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும், இலங்கையின் தொழிலாளர் தேவைகளை முதலில் உள்நாட்டு மனிதவளத்தின் மூலம் பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்காக தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும், தொழிற்துறையின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சித் திட்டங்கள் மற்றும் பாடத்திட்டங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்தார்.




.jpg)

.jpg)


.jpg)

