![]() |
ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு கிராம மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவந்த பொது மயானம், விளையாட்டுப் பூங்கா, கலாசார மண்டபம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கான காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாவடிவேம்பு கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளருடன் சாணக்கியன் முன்னெடுத்த தொடர் கலந்துரையாடல்களின் பலனாகவே இக்காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, குறிப்பிடப்பட்ட நான்கு முக்கிய தேவைகளுக்காகவும் காணிகளை ஒதுக்குவதற்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுப் பணிப்பாளரின் உத்தியோகபூர்வ சிபாரிசுக் கடிதம், மாவடிவேம்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரிடம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இத்தீர்வின் மூலம் பல வருடங்களாக மக்கள் எதிர்நோக்கி வந்த பொது மயானத்துக்கான காணி உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிறுவர் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் விளையாட்டுப் பூங்கா, சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளுக்கான கலாசார மண்டபம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்துக்கான நில ஒதுக்கீடுகளும் சாத்தியமாகியுள்ளன.
இந்நிலையில், மாவடிவேம்பு கிராம மக்கள், இக்காணிகள் எதிர்காலத்தில் கிராமத்தின் சமூக, கலாசார மற்றும் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பெரும் தூணாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான அ. பிரிநட்குணபாலன், செ. நிலாந்தன் உட்பட விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)


