நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே நான் சிறை செல்வேன் என அமைச்சருக்கு எப்படித் தெரியும்? – நாமல் கேள்வி



நீதிமன்றம் இதுவரை தீர்ப்பு வழங்காத நிலையில், இன்னும் சில நாட்களில் தான் சிறைக்குச் செல்வேன் என அரசாங்க அமைச்சர் ஒருவர் எவ்வாறு முன்கூட்டியே அறிந்துகொண்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

“நான் அமைச்சரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காத நிலையில், இன்னும் சில நாட்களில் நான் சிறைக்குச் செல்லப் போகிறேன் என்பது அவருக்கு எப்படித் தெரியும்?” என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், வழக்கு மற்றும் முன்வைக்கப்படும் ஆதாரங்களை ஆராய்ந்து நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நிலுவையில் உள்ள வழக்கொன்றின் முடிவு தொடர்பில் அமைச்சர் ஒருவர் முன்கூட்டியே கருத்து வெளியிடுவது, நீதித்துறை நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தன்னைப் பற்றிய விடயம் மாத்திரமல்ல என்றும், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான விடயம் என்றும் குறிப்பிட்ட நாமல் ராஜபக்‌ஷ, நீதிமன்றத் தீர்ப்புகளை அரசியல் தலைவர்கள் முன்கூட்டியே கணிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த வழக்கின் முடிவு அமைச்சருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், அந்தத் தகவல் அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை கேள்வி எழுப்புவதற்கு பொதுமக்களுக்கு உரிமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தீர்ப்பு நீதிமன்றத்திலிருந்தே வர வேண்டும்; அமைச்சரிடமிருந்து அல்ல” என நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்துள்ளார்.