அரசியலமைப்பு சீர்திருத்தத்தை விட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – மஹிந்த ராஜபக்ஷ



நாட்டில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு பதிலாக மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கே அரசாங்கம் முதன்மைத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக அரசினால் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பேசப்பட்டு வரும் இந்த 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வருவதை விட மக்களுக்கு ஆற்ற வேண்டிய பல பணிகள் அரசாங்கத்துக்கு இருக்கின்றன. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை முழுமையாக செய்து முடித்த பின்னர் இவ்வாறான எந்தவொரு சட்டத் திருத்தத்தையும் கொண்டு வருவதில் ஆட்சேபனை இல்லை.

தற்போது நாட்டிலுள்ள மக்களின் முதன்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அவசியமற்ற விடயங்களையே அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கிறது. உணவு மற்றும் அடிப்படை தேவைகள் இன்றி மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேவையற்ற விடயங்களைச் செய்ய முற்படும் போதே நாட்டில் பல சிக்கல்கள் உருவாகின்றன என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.