இந்த மோசடியின் கீழ், மோசடிக்காரர்கள் அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகள், சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக இணையத்தில் விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
வாடிக்கையாளர் ஒருவர் பொருட்களை கொள்வனவு செய்ய முன்வந்ததும், மோசடிக்காரர் அந்த வாடிக்கையாளர் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள உண்மையான ஹார்ட்வேர் விற்பனை நிலையமொன்றை தொடர்புகொண்டு, குறித்த பொருட்களை வாடிக்கையாளரின் வீடு அல்லது கட்டுமானப் பகுதிக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்கிறார்.
பொருட்கள் வாடிக்கையாளரிடம் வந்து சேர்ந்த பின்னர், மோசடிக்காரர் மீண்டும் வாடிக்கையாளரை தொடர்புகொண்டு, தான் வழங்கும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடுமாறு அறிவுறுத்துகிறார்.
வாடிக்கையாளர் அந்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்திய பின்னரே மோசடி தெரியவருகிறது. பொருட்களை விநியோகித்த சாரதி அல்லது உண்மையான ஹார்ட்வேர் விற்பனை நிலையம் பொருட்களுக்கான பணத்தை கோரும்போது, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை வாடிக்கையாளர் உணர்கிறார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், மோசடிக்காரருக்கு செலுத்திய பணத்தை இழப்பதுடன், விநியோகிக்கப்பட்ட பொருட்களையும் இழக்க நேரிடலாம்.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொலிஸார் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்:
* பொருட்கள் உங்கள் வீடு அல்லது கட்டுமானப் பகுதிக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டன என்பதற்காக மட்டும் உடனடியாக இணையவழியில் பணம் செலுத்த வேண்டாம்.
* பொருட்களை கொண்டு வந்த சாரதி அல்லது சம்பந்தப்பட்ட ஹார்ட்வேர் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை நேரடியாக தொடர்புகொண்டு பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* வங்கிப் பரிமாற்றம் மூலம் பணம் செலுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஹார்ட்வேர் விற்பனை நிலையத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கிற்கு மட்டுமே பணத்தை செலுத்துங்கள்.
* முடிந்தவரை பொருட்கள் கிடைத்த பின்னர் பணம் செலுத்தும் முறையை (Cash on Delivery) பயன்படுத்துங்கள்.





.jpg)





.jpg)
