இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் முறைகேடு குற்றச்சாட்டு – மனுஷ நாணயக்கார மீதான விசாரணைகள் நிறைவு


கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் ஊழல் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (28) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (28) கொழும்பு பிரதான் நீதிவான் அசங்க போதரகம முன்னிலையில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுஷ நாணயக்கார தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து, விசாரணை கோப்புகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

அவருக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு திகதியொன்றை வழங்குமாறும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட கொழும்பு பிரதான நீதிவான் இந்த வழக்கை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிவான் இ லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலுக்கு விவசாய வேலைகளுக்காக தொழிலாளர்களை அனுப்பியதில் தனது அரசியல் ஆதரவாளர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதன் மூலம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.