“தவறு செய்யவில்லை ; எதற்கும் பயப்பட வேண்டியதில்லை” – நாமல் ராஜபக்ஷ



கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தம்மையும் தமது தரப்பினரையும் பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தி வருவதாகவும், விசாரணைகளுக்காக அழைக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாம் உரிய முறையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கி வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹா, மஹர தொகுதிக்குட்பட்ட ரன்முத்துகல பகுதியில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் விசாரணைகள் தொடர்பில் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், கடந்த காலங்களில் மக்களின் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், எதிர்கால தலைமுறையினரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களை விமர்சித்தவர்கள் தற்போது அதே திட்டங்களை முன்னெடுப்பதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றுக்கான செலவுகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைத்தார்.

நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் சட்டத்துறையினர் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், அரசாங்கம் தனது தவறுகளை மறைப்பதற்காக ராஜபக்ஷ குடும்பத்தை இலக்குவைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“கடந்த 2015ஆம் ஆண்டு முதல் எங்களைப் பற்றி விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அழைக்கும் போதெல்லாம் வாக்குமூலம் அளிக்க நாங்கள் செல்கிறோம். நாங்கள் தவறு செய்யவில்லை என்பதால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை” என அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமது தரப்பில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவற்றைத் திருத்திக்கொண்டு பலமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.