நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய கலந்துரையாடல்



ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
 
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.

இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மாத்திரம் இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என்றும், அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

எனவே, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான முடிவு எந்தவொரு நபரையும் அல்லது குழுவையும் இலக்காகக் கொண்டதல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த சீர்திருத்தங்கள், முழுமையான கட்டமைப்புசார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரந்த மறுசீரமைப்புகளின் ஒன்று மாத்திரமேயாகும் எனவும், இது தனது தனிப்பட்ட கருத்து அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட கருத்து அல்ல எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது எல்லையை நீடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், இந்தத் தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து ஏதேனுமொரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என்றும் பரி

ந்துரைத்தனர். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.