மொனராகலையில் டிப்பருடன், உழவு இயந்திரம் மோதி கோர விபத்து : ஐவர் உயிரிழப்பு – மூவர் வைத்தியசாலையில்


வெல்லவாய–மொனராகலை வீதியின் கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை டிப்பர் வாகனம் ஒன்றும், 10 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றும் மோதியதில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களு பாலத்தின் மீது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், எதிர்திசையில் பயணித்த உழவு இயந்திரம் மற்றும் அதன் டிரெய்லருடன் மோதியுள்ளது.

இதன்போது டிரெய்லரில் பயணித்த எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்பர் வாகனம் மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.