மக்களுக்கு வழங்கிய நம்பிக்கைகளைக் காப்பாற்ற முடியாமல் அரசாங்கம் திணறுகிறது – சஜித்


வளமான நாடு, அழகான வாழ்க்கையை உருவாக்கித் தருவோம் என கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று வெறும் வாய்ச்சொல்லுக்கு மாத்திரம் சுருங்கி, இலட்சக்கணக்கான மக்களுக்கு பெற்றுக் கொடுத்த நம்பிக்கைகளைக் காப்பாற்ற முடியாமல் திணறிவருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வளமான நாடு, அழகான வாழ்க்கையை உருவாக்கித் தருவோம் என கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று வெறும் வாய்ச்சொல்லுக்கு மாத்திரம் சுருங்கி, இலட்சக்கணக்கான மக்களுக்கு பெற்றுக் கொடுத்த நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் திணறிவருகிறது. குறிப்பாக மாத்தறை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான 14 கிராமிய வங்கி கிளைகளில் 13,000 வைப்பாளர்கள் காணப்படுகின்றனர். 2026 ஏப்ரல் மாதம் வரை இந்த 14 கிராமிய வங்கிகளின் கொடுக்கல்வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், தற்சமயம் வைப்பாளர்களால் தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று பல வருடங்களாக கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காமையினால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து இப்போது வெளியில் தெரிவிக்கப்பட்டாலும், 2026 ஏப்ரல் வரை குறித்த கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரின் பொறுப்பு இந்த வைப்பாளர்களின் பண நிர்வாகத்தை மேற்பார்வை செய்வதாக காணப்பட்டாலும், அவர் இந்த வைப்பாளர்களிடம் வழங்கியுள்ள பதிலானது பொலிஸாரை நாடுமாறு கூறியுள்ளமையாகும். இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாக வைப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு நிலவுவதால், அவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன் வளமான நாடு, அழகான வாழ்க்கையை உருவாக்கித் தருவோம் என தெரிவித்தாலும், சமுர்த்தி கட்டமைப்புக்குள் சமூக மூலதன வங்கிகளுக்காக உள்ளீர்க்கப்பட்ட 250 கணினி உதவியாளர்கள் இன்று வீதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறும் இந்த அரசாங்கம், 2021 ஆம் ஆண்டு தொழில் நியாய சபை மன்றம் வழங்கிய தீர்ப்பான, இந்த 250 பேரையும் மீண்டும் சேவையில் அமர்த்த வேண்டும் என்ற தீர்ப்பினை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக போராட்ட முழக்கங்களை எழுப்பிப் பேரணிகளில் கலந்து கொண்டு தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த இந்த அரசாங்கம், இன்று இந்தக் சமுர்த்தி வங்கி கணினி உதவியாளர்களை வெளியில் தள்ளியுள்ளது. இப்போதாவது இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதைய அரசாங்கம் இந்தச் சம்பளச் சலுகைகள், கொடுப்பனவுகள் போன்றவற்றை பெற்றுத் தருவோம் என பிரஸ்தாபித்தாலும், இந்த அரசாங்கமும் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்பது ஒரு கனவாக மாறி, இலட்சக்கணக்கான மக்கள் பெற்றுத் தந்த ஆணையை அரசாங்கம் மீறிவிட்டது. இப்போதாவது மக்களுக்கு பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றார்.