கல்முனையில் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்


கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாச் செடிகளைப் பயிரிட்டு வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (20) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை, அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான ஜவாத் மற்றும் இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய பொலிஸார் புதன்கிழமை (19) அதிரடியாக முற்றுகையிட்டனர்.

கல்முனை நகர்ப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே, இக் கஞ்சாத் தோட்டம் பற்றியும் அங்கிருந்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தமை பற்றியும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இச் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேகநபறைக் கைது செய்தனர்.

குறித்த வீட்டின் மொட்டை மாடியில் முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்த கஞ்சாச் செடிகளைப் பிடுங்கிய பொலிஸார், அவற்றைச் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.