பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு - பேராசிரியர் அமில இசுரு




பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்தும் ஆண் மாணவர்களில் சுமார் 70 முதல் 80 சதவீதமானோர் ஏதாவது ஒரு வகையான போதைப்பொருள் சார்புநிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையேயான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது தொடர்பான “ரட்டம எகட்ட” தேசிய வேலைத்திட்டம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்குள் ஈர்ப்பதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் அதனால் கிடைக்கும் உணர்வுக்காக மட்டுமன்றி, அதனை நிறுத்தும்போது ஏற்படும் உடல் மற்றும் உள ரீதியான விலகல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவதாக அவர் விளக்கினார்.

பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் பல்கலைக்கழக அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் அடிப்படையில், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அறிமுகமாகி அதற்குப் பழக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் பேராசிரியர் அமில இசுரு குறிப்பிட்டார்.

குறிப்பாக பல்கலைக்கழகப் படிப்பை நிறைவு செய்யாமல் இடையில் விலகும் ஆண் மாணவர்களிடையே இந்த நிலை அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், இளைஞர்களைக் குறிவைக்கும் போதைப்பொருள் வியாபாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.