பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய விபத்துகளும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் அதிகளவில் பட்டம் விடுவதில் ஈடுபட்டு வருவதாகவும், பாதுகாப்பற்ற முறையில் பட்டம் விடுவதால் கடுமையான காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சம்பவங்கள் ஏற்படுவதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கூரைகள் மற்றும் உயரமான இடங்களில் இருந்து பட்டம் விடுதல், பட்ட நூல்கள் உயர் மின்னழுத்த மின்கம்பிகளில் சிக்குதல், ஓடும்போது மோதி விழுதல் போன்றவற்றால் விபத்துகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உயர் மின்னழுத்த மின்கம்பிகளில் பட்ட நூல் சிக்கும்போது அதன் ஊடாக மின்சாரம் கடத்தப்பட்டு கடுமையான மின்சாரத் தாக்கம் மற்றும் தீக்காயங்கள் ஏற்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில் கைகள், தோள்கள் மற்றும் மார்புப் பகுதிகளிலுள்ள திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் கடுமையாக சேதமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறுவர்கள் பட்டம் விடும்போது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், மின்கம்பிகள் மற்றும் உயரமான இடங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களின் மகிழ்ச்சியைப் போலவே அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்குமாறு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


.jpg)


.jpg)





.jpg)
