ஹெரோயின் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை நிரூபணம் – இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!



2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளைஞன் ஒருவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று வெள்ளிக்கிழமை (21) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா, மெனிக்பாம் பகுதியில் இக் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

வழக்கு விசாரணைகளின் போது எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

நாடு முழுவதும் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், போதைப்பொருள் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எச்சரிக்கையைச் சமூகத்திற்கு உணர்த்தும் முகமாகவும் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் சாட்சியங்கள் அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீயினால் நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.