கொஹுவல பாலம் தொடர்பான படம் வைரல்: போலிச் செய்திகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை




கொஹுவல பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த நிலையில் ஒருவர் காணப்படுவதாகக் கூறி போலியான படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளைப் பகிர வேண்டாம் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தவறான தகவல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டக்கூடிய பதிவுகளைப் பரப்புவது சமூகத்திற்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகவும் அமையலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் “Check – Verify – Share Responsibly” என்ற நடைமுறையைப் பின்பற்றுமாறும், தகவலின் மூலத்தைச் சரிபார்த்து நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி மூலங்கள் மூலம் உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே அச்சம் அல்லது அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே போலிச் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினிக் குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.