வங்கி அதிகாரி என ஏமாற்றி ஹோட்டலில் திருடிய நபர்: பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்
கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த 03 ஆம் திகதி குறித்த ஹோட்டலுக்கு வருகை தந்த நபரொருவர், தான் ஒரு முன்னணி தனியார் வங்கியின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
பின்னர், தனது வங்கி ஊழியர்கள் இரவு விருந்திற்காக வருகை தரவுள்ளதாகக் கூறி, பெருமளவிலான உணவுகளை ஓடர் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹோட்டலில் ஊழியர்கள் பணியில் தீவிரமாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பெறுமதிமிக்க பொருட்களைத் திருடிக்கொண்டு அவர் தப்பிச் சென்றுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்தினரால் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், இச் சந்தேகநபர் இதற்கு முன்னரும் கருவாத்தோட்டம், பேலியகொடை மற்றும் நுகேகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இதே பாணியில் மோசடிகளைச் செய்து திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் புகைப்படங்கள் மற்றும் சிசிரிவி காட்சிகளைப் பொலிஸார் வெளியிட்டுள்ளடன், இவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியுமாயின் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (கொம்பனிவீதி): 071-8591561
கொம்பனிவீதி பொலிஸ் நிலையம்: 011-2433829
இதேவேளை, வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வருகை தரும் நபர்கள் குறித்து எப்போதும் அவதானத்துடனும் விழிப்புடனும் செயல்படுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





.jpg)
.jpg)
.jpg)




