
அமெரிக்காவில் தனது தாய் மற்றும் இளைய சகோதரரை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாசசூசெட்ஸ் மாநிலத்தின் ஆக்டன் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் 17 வயதான அர்ஜுன் அரவிந்த் என்பவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் அவரது தாயாரான சுதா வெங்கடேசன் (45) மற்றும் இளைய சகோதரரான சித்தார்த் அரவிந்த் (14) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், அர்ஜுனின் தந்தை பொலிஸாரிடம் நலன் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார். அத்துடன், திட்டமிடப்பட்டிருந்த சந்திப்புக்காக வீட்டிற்குச் சென்ற ஆசிரியர் ஒருவராலும் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சித்தார்த்தை வீட்டின் முதல் தளத்திலும், சுதா வெங்கடேசனை வீட்டின் கீழ்தளத்திலும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
இருவரது உடல்களிலும் காயங்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் மருத்துவப் பரிசோதகரால் உறுதிப்படுத்தப்படவுள்ளது.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது சந்தேகநபரின் அண்மைக்கால இணையச் செயற்பாடுகள் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக மிடில்செக்ஸ் கவுண்டி மாவட்ட சட்டத்தரணி மரியன் ரயன் ( Middlesex County District Attorney Marian Ryan ) தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கோட்பாட்டு சூழ்நிலைகள் அல்லது கற்பனைக் கதைகள் குறித்து அவர் இணையத்திலும் ChatGPT-யிலும் ஆராய்ந்திருந்ததாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல்களுடன் தொடர்புபடுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளை உள்ளடக்கிய Gothic பாணியிலான கற்பனைக் கதைகளை உருவாக்குவதற்கும் ChatGPT பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் தனது தாயாருக்குச் சொந்தமான 2014 Honda Accord காரில் சந்தேகநபர் வீட்டிலிருந்து வெளியேறியதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து மறுநாள் காலை ஆக்டனுக்கு அருகிலுள்ள வேலண்ட் பகுதியில் குறித்த வாகனத்திற்குள் இருந்தபோது அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் சார்பில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மனு பதிவு செய்யப்பட்டது. அவரை பிணையின்றி தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





.jpg)




.jpg)

