நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான பொய்ப் பிரசாரம் : CIDயில் பொதுஜன பெரமுன முறைப்பாடு!



விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் கடற்புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுத்து, நாட்டின் கடற்பரப்பை முழுமையாகக் கட்டுப்படுத்திப் பிரபாகரன் தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்த கடற்படைக்குச் சேறு பூச வேண்டாம் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரசாரங்கள் குறித்தும் பொதுஜன பெரமுன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.

கடற்படைக்குச் சொந்தமான ஆடம்பரப் பேருந்தொன்றைப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியதாகச் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்து இச்சம்பவம் தொடர்பில் பொதுஜன பெரமுன சார்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்கு முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் திங்கட்கிழமை (17) முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

கடந்த வார இறுதியில் சமூக வலைத்தளங்களில் சிறப்பு காணொளி ஒன்று பரப்பப்பட்டது. கடற்படைக்குச் சொந்தமான ஆடம்பரப் பேருந்தைப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்குச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக உணர்த்தும் வகையில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இந்தக் காணொளியைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். இந்தச் சோடிக்கப்பட்ட பிரசாரத்துக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடு அளித்துள்ளதோடு, கடற்படைத் தலைமையகத்துக்கும் இது குறித்து அறியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாமல் ராஜபக்‌ஷ இந்தப் பேருந்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்பதற்கு உங்களிடம் ஏதேனும் தகவல்கள் இருந்தால், வந்து முறைப்பாடு அளித்துச் சட்டத்தின் முன் அதனை நிரூபியுங்கள். முகநூலில் பொய்ப் பிரசாரம் செய்யாமல் உண்மையான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன்.

இந்தப் பொய்ப் பிரசாரத்துக்குப் பின்னால் ஒரு ஆபத்தான பின்னணி உள்ளது. கடற்படை மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரிகளைப் பற்றித் தொடர்ச்சியாக எதிர்மறையான எண்ணத்தைச் சமூகத்தில் உருவாக்க முயற்சிப்பதாகும். முன்னாள் கடற்படை அதிகாரியான யோஷித ராஜபக்‌ஷ கடற்படையில் இணைந்தது மற்றும் அவரது சேவை குறித்தும் பொய்களைப் பரப்பினார்கள்.

ராஜபக்‌ஷக்களுக்குச் சேறு பூசுவது ஒருபுறமிருக்க, அதற்குப் படைத்துறையைத் தொடர்புபடுத்துவது முற்றிலும் வேறொரு விடயமாகும். கடற்படையின் நற்பெயர், தொழில்முறைத்தன்மை மற்றும் பெருமையைக் சீர்குலைத்து, மக்கள் மத்தியில் கடற்படைக்கு எதிராக வெறுப்பை உருவாக்கச் சிலர் முயல்கின்றனர்.

இந்த நோக்கம் இன்னமும் ஈழக் கனவு காணும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் வீரவழிபாடு செய்யும் சர்வதேசச் சக்திகளுக்கே உள்ளது. போர்க்காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கடல்வழி ஆயுத விநியோக வலையமைப்பை அழிப்பதற்கும், மிதக்கும் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கும் கடற்படை பெரும் பங்காற்றியது.

மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் கடற்புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுத்து, நாட்டின் கடற்பரப்பை முழுமையாகக் கட்டுப்படுத்திப் பிரபாகரன் தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்தது கடற்படையே ஆகும்.

அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்தின் போது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவரைத் திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பாதுகாக்கவும் கடற்படையே நடவடிக்கை எடுத்தது. இதனால் பிரபாகரனைக் காப்பாற்ற முடியாமல் போன வன்மத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் கொண்ட பிரிவினைவாதிகள் கடற்படையின் மீது மிகுந்த வெறுப்புடன் செயற்படுகின்றனர்.

எங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் அரசியல் சேறுபூசல்களுக்கு நாங்கள் அரசியலாகவும் சட்டரீதியாகவும் பதிலளிப்போம். ஆனால் நாட்டிற்குச் சேவையாற்றிய கடற்படையைப் போன்ற உன்னதமான நிறுவனத்துக்குச் சேறு பூசும்போது எம்மால் அமைதியாக இருக்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டு கடற்படைக்கு எதிரானது. கடற்படை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றது. எனவே பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்றார்.