புதிய இலங்கை கடவுச்சீட்டுகள் சில நாடுகளில் நிராகரிப்பு - நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் MP !



புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை காரணமாக, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த கடவுச்சீட்டை இயந்திரம் மூலம் முறையாக வாசிக்க முடியாததால், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளுக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், இலங்கை கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும், கடவுச்சீட்டு வழங்குவதற்கான 6,000 ரூபா கட்டணம் குறைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய கடவுச்சீட்டுகளில் Observation மற்றும் Extension பக்கங்கள் இல்லை என்றும், அச்சுத் தரம் குறைவாக இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்திற்கும் ஊடுருவுவது போன்ற பிரச்சினைகளால் சில நாடுகளில் கடவுச்சீட்டுகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரப் பிரச்சினைகள் இல்லை எனத் தெரிவித்தார்.

பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைத்தமை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாகவும், பல நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதாகவும், e-Passport முறையை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.