ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய 10 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் 2.09 மணியளவில் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பணம் குறித்து இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலுள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ‘BIZ Solutions INC’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கொன்றிற்கு 1,454,651.24 யூரோ இலஞ்சமாகப் பெறப்பட்டதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்தத் தொகையில் 800,000 அமெரிக்க டொலர், இலங்கை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ‘Sabre Vision Holdings LTD’ நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரிலுள்ள OCBC வங்கியில் பராமரிக்கப்பட்ட கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணத்துடன் தொடர்புடையதாக, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை வர்த்தகர் ஒருவரிடமிருந்து நாமல் ராஜபக்ஷ மொத்தமாக 10 கோடி ரூபாயைப் பெற்றதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த இலங்கை வர்த்தகர் வழங்கிய வாக்குமூலம், பிரான்ஸை தளமாகக் கொண்ட எயார்பஸ் நிறுவன அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்தக் கைது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




.jpg)






.jpg)

