மழையுடனான காலநிலை தொடரும் – 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட அறிவுறுத்தல்


வடகிழக்கே, அந்தமான் பிராந்தியத்தின் வங்காள விரிகுடாப் பகுதியில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ள நிலையில், இத்தொகுதி இலங்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது போதிலும்,அமைப்பை நோக்கி வீசும் காற்றோட்டம் காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுவதால் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாக மாறும் என்பதுடன், கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மீனவ சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மழையுடனான காலநிலை தொடரும்.

வடகிழக்கே, அந்தமான் பிராந்தியத்தின் வங்காள விரிகுடாப் பகுதியில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. இத்தொகுதி இலங்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றபோதிலும், அமைப்பை நோக்கி வீசும் காற்றோட்டம் காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மேற் இந்த பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யலாம்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும்,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை,அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு,காலி, கம்பஹா, களுத்துறை,கண்டி,கேகாலை, மாத்தறை,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கண்டி மாவட்டத்தில் கஸ்பேவ கோறளை,கோலை மாவட்டத்தில் தெஹியோவிட, அரநாயக்க, தெரணியாகல, மாவனெல்லை, யட்டியாந்தோட்டை நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை மேல், கிழக்கு, அம்பகமுவ,ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


காற்றின் வேகம் அதிகமாக காணப்படும்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


கடல் கொந்தளிப்பாக இருக்கும்

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் மற்றும் முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கையைச் சூழவுள்ள மேலும் பல பிரதேசங்களுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, கங்க இஹல கோரளை, உடபலாத்த, தொலுவ, உடநுவர,யடிநுவர, கங்கவட்ட கோரளை,ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும்.

எனவே,இது குறித்து அவதானம் செலுத்தி,அப்பகுதிகளைச் சூழ வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.