லஞ்ச் ஷீட், பொலித்தீன் பைகள் தொடர்பில் நாடளாவிய சோதனை – 104 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு



நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 104 விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 15ஆம் திகதி 22 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், லஞ்ச் ஷீட் தொடர்பில் 43 விதிமீறல்களும், LDPE/LLDPE வகை “சிலி சிலி” பைகள் தொடர்பில் 58 விதிமீறல்களும், ஏனைய பொலித்தீன் பொருட்கள் தொடர்பில் 3 விதிமீறல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட லேபிள் விதிமுறைகளைப் பின்பற்றாத லஞ்ச் ஷீட் தொகுதிகள் சட்ட நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி குறிப்பிட்ட LDPE/LLDPE பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்க முடியாது. அவற்றின் விலை தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவதுடன், அறவிடப்படும் தொகை வாடிக்கையாளரின் பற்றுச்சீட்டிலும் குறிப்பிடப்பட வேண்டும்.

விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட விநியோகச் சங்கிலி தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், நாடளாவிய சோதனைகள் தொடரும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.