
“தந்தை இப்போது அழுவதற்குப் பதிலாக, திருட வேண்டாம் என்று முன்பே கூறியிருக்க வேண்டும். தாயாக இருந்தாலும் பாட்டியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. பொதுமக்களின் பணத்தைத் திருடியவர்கள் மீது எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று சனிக்கிழமை (12) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் உரையாற்றியபோதே, ராஜபக்ஷ குடும்பம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் நடைபெறும் பேரணியையும் விமர்சித்த ஜனாதிபதி, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்படும் பலரை அந்தக் கூட்டத்தில் காண முடியும் எனக் கூறினார்.
“CID அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அநுராதபுர பேரணி பொதுமக்களின் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான முயற்சியாகவே அது நடத்தப்படுவதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் பங்கேற்ற நிலையில் அநுராதபுரத்தில் குறித்த பேரணி நடைபெற்றது.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அகல உடல் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.








.jpg)

.webp)
.jpg)
.jpeg)