புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள்
புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள், பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வருடம் ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் இலக்கத் தகடுகளை விரைவாக வழங்குவதற்கான நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வருடம் பதிவு செய்யப்பட்ட கார்கள், SUV வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் முன்புறம் மற்றும் பின்புறம் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளன.
வருமான அனுமதிப்பத்திரங்களைச் சோதனையிடும்போது மின்சார வாகனங்களைப் பொலிஸார் எளிதில் அடையாளம் காண இந்த மாற்றம் உதவும். மின்சார வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளின் பின்னணி பச்சை நிறமாக இருக்கும். எனினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் குறியீடு உள்ளிட்ட ஏனைய அம்சங்களில் மாற்றம் இருக்காது.
ஏனைய வாகனங்களுக்கு முன்புறத்தில் வெள்ளை நிற இலக்கத் தகடும், பின்புறத்தில் மஞ்சள் நிற இலக்கத் தகடும் வழங்கப்படும்.
2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நிலுவையிலுள்ள இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.




.jpg)






.jpg)

.webp)