வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது வருமானத்தை வீடமைப்பு, கல்வி, தொழில் முயற்சிகள் மற்றும் ஏனைய நிதித் தேவைகளுக்காக முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசாங்கம் பல்நோக்குக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) தகவலின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தம் மற்றும் பணம் அனுப்பியதற்கான பதிவுகளைச் சமர்ப்பிக்கக்கூடிய வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் இந்தக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கடவுச்சீட்டு, வேலைவாய்ப்பு ஒப்பந்தம் மற்றும் உத்தியோகபூர்வ வங்கிச் சேவைகள் ஊடாக நாட்டிற்குப் பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வீடு கட்டுதல் அல்லது கொள்வனவு செய்தல், புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்துதல், வாகனம் கொள்வனவு செய்தல் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை ஈடுசெய்தல் போன்ற தேவைகளுக்காக இந்தக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையைப் பெற்றுக்கொள்வதுடன், தேசிய பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வான தவணை வசதிகள் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்களுடன் கடன் மீளச் செலுத்தும் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் கட்டமைப்பின் கீழ் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் ஊடாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், ஒவ்வொரு வங்கியும் தனித்துவமான கடன் வசதிகளை வழங்கவுள்ளன.