சுனீத்திரா புட்பமூர்த்தி 38 வருட ஆசிரியப் பணியில் இன்று ஓய்வு பெறுகிறார்

(சித்தா) 

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியமிக்க கிராமமான குருமண்வெளி கிராமத்தைச் சேர்ந்த சுனீத்திரா புட்பமூர்த்தி 38 வருட ஆசிரியப் பணியில் இன்று (05.09.2026)  ஓய்வு பெறுகிறார். இவர் ஓய்வு பெற்ற முதலாந்தர அதிபர் நாகமணி. புட்பமூர்த்தியின் துணைவியும் ஆகும்.

சுனீத்திரா புட்பமூர்த்தி தனது ஆரம்பக் கல்வியை தனது கிராமத்தில் உள்ள மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் ஆரம்பித்த இவர் உயர் நிலைக் கல்வியை கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரியில் தொடர்ந்தார். 1988 ஆம் ஆண்டு ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவர் தனது முதல் நியமனத்தின் பிரகாரம் தனது சொந்தக் கிராமத்தின் மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் தனது கடமையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயம், மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலயம், மட்/பட்/மண்டூர் மகாவித்தியாலயம், மட்/பட்/எருவில் கண்ணகி மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் தனது கற்பித்தல் பணியினை மேற்கொண்டதுடன் பணி நிறைவுவரும் வரை இப் பாடசாலையில் தனது சிறப்பான பணியினை மேற்கொண்டார்.

1991/1992 ஆம் கல்வியாண்டில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விஞ்ஞானப் பாட பயிற்றப்பட்ட ஆசிரியராக தன்னை புடம் போட்டுக் கொண்ட சுனீத்திரா புட்பமூர்த்தி விஞ்ஞான பாடத்தை மாணவர்களுக்கு மிகவும் இலகுவான முறையில், செயற்பாட்டுமுறையில் கற்பித்து அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பெற்றறோர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான நடைபெறும் விஞ்ஞான முகாமில் வலய ரீதியான காத்திரமான பங்களிப்பினையும் மேற்கொண்டு வலயக் கல்விப் பணிப்பாளரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் மாணவர்களை போட்டிகளுக்குத் தயார் படுத்தல், மாணவர்களை போட்டிகளில் பங்கேற்றச் செய்வதற்கான ஆலோசனை, ஊக்குவிப்புகள் வழங்கி மாணவர்களை கோட்ட, வலய, மாகாண, தேசிய மட்டப் போட்டிகளில் ஈடுபட வைத்து வெற்றியும் கண்டார். 

பணிக் காலத்தில் இவரின் சேவையைப் பாராட்டி கல்விச் சமூகம் வியக்கத்தக்க வகையில் பாராட்டு நிகழ்வினையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.