நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு


நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து எழும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் மனைவியான லிமினி ராஜபக்‌ஷ மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் தொடர்ச்சியாக அநாகரிகமான அவதூறுப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்து அதற்கு எதிராக கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (08) சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஏற்கனவே நாமல் ராஜபக்‌ஷ ரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்தோம்.

தற்போது அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை எதிர்பார்த்துள்ளோம். தேசிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் நாமல் ராஜபக்‌ஷ இல்லாத குறையை நிவர்த்தி செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஷிராந்தி ராஜபக்‌ஷ , கோட்டாபய ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷவின் சகோதரர்கள் மற்றும் நாமல் ராஜபக்‌ஷவின் மனைவியான லிமினி ராஜபக்‌ஷ உள்ளிட்ட பலரை களமிறக்குமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

குறிப்பாக நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து வலுவாக எழுகிறது. கடந்த காலங்களில் நாமல் ராஜபக்‌ஷவுடன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது அவரது ஆளுமை, மொழிவளம் மற்றும் வணிக அறிவு என்பவற்றை மக்கள் அவதானித்த காரணத்தினாலேயே இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் தலைவரின் மனைவி மக்கள் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆளுமையும் திறமையும் அவரிடம் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல் கும்பல், எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ஷ கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, அவரது தந்தை திலக் வீரசிங்க மற்றும் அவரது வியாபாரங்களை இலக்கு வைத்து பாரிய அசத்திய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். திலக் வீரசிங்க என்பவர் திறமையான, நேர்மையான, குணநலன் மிக்க, நாட்டிற்குப் புகழைத் தேடிக்கொடுத்த ஒரு வர்த்தகர் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

நாட்டின் தலைவர்களின் குடும்பங்களை இலக்கு வைத்து இவ்வாறு சேறுபூசும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளோம். பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய அவதூறுகளையும் இழிவான செயற்பாடுகளையும் தடுப்பதற்கான அவசியமான சட்டத் திருத்தங்கள் நாமல் ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் கட்டாயம் கொண்டுவரப்படும் என்றார்.