
பேலியகொட பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனையிட்ட அதிகாரிகள், 1,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத இ-சிகரெட்டுகள் மற்றும் அவற்றுக்கான ரீஃபில் உபகரணங்கள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை சுங்கத் திணைக்களம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரிவின் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலகெடிஹேன பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த பொதி ஒன்றை சோதனையிட்டபோது, அதிலிருந்து 220 சட்டவிரோத இ-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையில், உரிமை கோரப்படாத ஏழு பொதிகளில் இருந்து மேலும் 1,249 இ-சிகரெட்டுகள், 145 ரீஃபில் பெட்டிகள், 94 கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் தலா 400 கிராம் எடையுடைய 1,520 உடல் நிறத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் டின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் அரச பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு அனுப்புவதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







.jpg)




.jpg)