அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது வருட நிறைவு விழா செயற்பாடுகளில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று (17) பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த நிகழ்வின் மூலம் புத்திக பத்திரண, ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் ஒரே மேடைக்குக் கொண்டுவர எடுத்த நடவடிக்கைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐக்கிய தேசிய கட்சி என்பது ஒரு ஜனநாயக சோசலிசக் கட்சியாகும். குறிப்பாக, அது குறித்து ஜே.ஆர். ஜயவர்தன 1975ஆம் ஆண்டு பிரகடனம் செய்தார். அதற்காக ரணசிங்க பிரேமதாச மற்றும் ஏனைய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
அது தொடர்பாக நான் முதலில் ஒரு விளக்கத்தைத் தருகின்றேன்:
"ஒரு சிறிய சொத்து, ஒரு சிறிய வியாபாரம் அல்லது ஒரு சிறிய வீடு ஆகியவற்றுக்குச் சொந்தக்காரராக இருப்பவரிடம் ஒருவித சுதந்திரமான மற்றும் சுயாதீனமான இருப்பு காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி நம்புகிறது. நாடு முழுவதும் சொத்துரிமை இலட்சக்கணக்கான மக்களிடையே பரவலாக்கப்படும்போது, அந்தச் சொத்துரிமை மூலமாக உருவெடுக்கும் அதிகாரமும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவ்வாறு பகிரப்பட்ட அதிகாரத்தை முறையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்த பயன்படுத்த முடியாது.
அதிகாரத்தையும் சொத்துரிமையையும் அரசாங்கத்தின் முன்பாக அல்லது ஏதேனும் சலுகை பெற்ற வர்க்கத்தின் முன்பாக மட்டுமே குவிக்கவோ அல்லது ஒன்று திரட்டவோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு நபருக்கும் ஒரு சுதந்திர மனிதனாக வாழ்வதற்கும், தனது குடும்பத்தைப் பேணுவதற்கும், சட்டபூர்வமான உரிமைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் அவற்றை நுகர்வதற்கும், தனது திறமைகளை விரும்பியவாறு பயன்படுத்துவதற்கும், தனது மதத்தைக் கடைப்பிடிப்பதற்கும், தான் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்குமான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகும்."
இதனை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஆர். ஜயவர்தன 17 ஆண்டுகாலப் புரட்சியொன்றை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாசவும் அதனை முன்னெடுத்துச் சென்றார். இந்நாட்டின் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றியமைத்தார்கள். நல்லதொரு வாழ்க்கைத்தரம் உருவாக்கப்பட்டது. நாங்கள் 1977இல் ஆட்சிக்கு வரும்போது எமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 பில்லியனாக இருந்தது. நாங்கள் ஆட்சியிலிருந்து வெளியேறும்போது அது 5,000 பில்லியனாக இருந்தது.
எமது தனிநபர் வருமானம் அன்று 285 டொலருக்கும் 287 டொலருக்கும் இடையில் இருந்தது. இன்று அது 5,000 மில்லியனாகும். குறிப்பாக, அன்று பாடசாலை செல்லும் குழுவினரைப் பார்த்தால், அன்று கல்வி கற்கும் அளவு 2.5 மில்லியனாக இருந்தது. 1994இல் மீண்டும் நாட்டை கையளிக்கும்போது அது 4.1 மில்லியனாக இருந்தது. இன்று 3.9 மில்லியனாகவே இருக்கிறார்கள். ஏனெனில் நாட்டின் சனத்தொகை அதிகரிப்பதில்லை. அப்படியானால் 17 ஆண்டுகளில் 1.6 மில்லியன் பேருக்கு எம்மால் இந்நாட்டில் கல்வியை வழங்க முடிந்தது. இதுவொரு புரட்சியல்லவா?
குறிப்பாக, 10 வீத வீடுகளுக்கும், 10 வீத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே மின்சாரம் இருந்தது. இன்று 95 வீத வீடுகளுக்கு மின்சாரம் உள்ளது. அன்று 40 வீத வீடுகளுக்கே உறுதியான கூரையும் சிமெந்துச் சுவர்களும் இருந்தன. நாங்கள் அதையும் மாற்றியமைத்தோம். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எடுத்த நடவடிக்கையின் காரணமாக இன்று 80 வீத வீடுகளுக்கு உறுதியான கூரையும் சிமெந்துச் சுவர்களுடனான வீடுகளும் காணப்படுகின்றன.
இது ஒரு புரட்சியாகும். நாங்கள் என்ன செய்தோம்? பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தோம். அத்துடன் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினோம். நாட்டின் ஜனநாயகத்தையும் இறைமையையும் உறுதிப்படுத்தினோம்.
ஜே.ஆர். ஜயவர்தன இந்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு அதிகாரம் பாராளுமன்றத்தில்தான் இருந்தது. 78ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையின்படி இறைமை ஆளுமை அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பன மக்கள் இறைமைக்குள் உள்ளடங்குகின்றன எனக் கூறப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இந்நாட்டின் வாக்காளர்களுக்கு அது பொறுப்பளிக்கப்பட்டது. அரசியலமைப்பில் பிரகடனப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் எமது இறைமைக்குள் உள்ளடக்கப்பட்டன.
அதேபோன்று வாக்குரிமையும் எமது இறைமைக்குள் உள்ளடக்கப்பட்டது. அவையெல்லாம் இருப்பது ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டுவந்த இந்த சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தினாலாகும்.
அதேபோன்று 83ஆவது உறுப்புரையின் மூலம் சில சட்டமூலங்கள் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என 3ஆவது உறுப்புரையுடன் இணைக்கப்பட்டது. பௌத்த மதத்தை 9ஆவது உறுப்புரையிலும் உள்ளடக்கினோம். அத்துடன் அடிப்படை உரிமைகளில் நீதிமன்ற அதிகாரத்தை செயற்படுத்துவதற்காக 126ஆவது உறுப்புரையும் வழங்கப்பட்டது. இதில்தான் புரட்சி இருக்கிறது. இதுதான் இன்று எமக்குள்ள உரிமையாகும்.
அன்று நாங்கள் வறுமையிலிருந்து விடுபட்டமை உண்மையாகவே ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதி 17 ஆண்டுகள் பூராகவும் முன்னெடுத்துச் சென்ற இந்தப் புரட்சியினாலேயாகும். அவரைப் போன்றே பிரேமதாசவும், மகாவலி திட்டத்தை உருவாக்கிய காமினி திசாநாயக்க, மஹபொல புலமைப்பரிசிலை அறிமுகப்படுத்திய லலித் அத்துலத்முதலி எடுத்த முயற்சிகளை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றேன்.
எனவே இந்தப் புரட்சியை மேலும் முன்னோக்கிக் கொண்டுசெல்வதிலேயே எமது அர்ப்பணிப்பு இருக்கிறது. அந்த விடயங்களை நினைவுகூரும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது வருட நிறைவு விழா செயற்பாடுகளையும் நாங்கள் தற்போது ஆரம்பித்துள்ளோம். அவற்றுக்கெல்லாம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.









.jpg)



.jpg)