“ஏன் இன்று? ஏன் இப்போது? ஏன் 18ஆம் திகதி வரை?” – நாமல் ராஜபக்ஷ கேள்வி





தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நேரம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் தமது கட்சி நடத்தவுள்ள அரசியல் கூட்டங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு ஆட்சியைக் குறிக்கும் அரசியல் கூட்டம் செப்டெம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அதில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டம் செப்டெம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டு மக்கள் கேட்கிறார்கள்: ஏன் இன்று? ஏன் இப்போது? ஏன் 18ஆம் திகதி வரை? மக்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்; அவர்களுக்கு உண்மை தெரியும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பெருமளவான பொதுப் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியதுடன், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தை மீட்டு நாட்டுக்குக் கொண்டுவருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வரவேற்பதாகவும், தவறு இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்தால் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும். குற்றமற்றவர் என்ற அனுமானமும் நியாயமான விசாரணைக்கான உரிமையும் மதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டரீதியான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அல்லது தீர்மானங்களைச் சட்டத்தின் கீழ் சவாலுக்கு உட்படுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் பதவிகள் தற்காலிகமானவை; சட்டத்தின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும். இந்தச் சட்ட நடவடிக்கைகளை அமைதியாகவும் அச்சமின்றியும் எதிர்கொள்வேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.