2026ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த விஞ்ஞானக் கழகம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி முதலிடம் பெற்று சாதனை!


கல்வி அமைச்சும் தேசிய விஞ்ஞான மன்றமும் (NSF) இணைந்து நடத்திய 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சிகள் மற்றும் விஞ்ஞானக் கழகங்களுக்கான மதிப்பீட்டில், மட்டக்களப்பு பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட மட்/ பட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இப்போட்டியில் பாடசாலையின் விஞ்ஞானக் கழகமானது நாட்டின் மிக உயரிய "5-Star Rating" அங்கீகாரத்தைப் பெற்றதுடன், பின்வரும் உயரிய விருதுகளையும் வென்று பாடசாலைக்கும் பட்டிருப்பு வலயத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது:

• 🥇 President of the Science Club (விஞ்ஞானக் கழகத் தலைவர் விருது)

• 🏆 Best Science Club of the Year 2026 (2026ஆம் ஆண்டின் சிறந்த விஞ்ஞானக் கழகம்)

• 🇱🇰 All-Island 1st Place (அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்)

• ⭐ 5-Star Rating (ஐந்து நட்சத்திர தரவரிசை)

பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்து கொண்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) கோலாகலமாக நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சரினால் இவ்விருதுகள் உத்தியோகபூர்வமாக வழங்கி கௌரவிக்கப்பட்டன.

P. அபிநயா, V.பிருந்திக்கா
J. தர்சாலினி ஆகிய மாணவிகள் முருங்கை இலை சாற்றினை கறியுப்புடன் சேர்த்து  மருத்துவ குணமுள்ள கறியுப்பாக மாற்றுதலுடன் தொடர்பான ஆராய்ச்சினை  மேற்கொண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இந்நிகழ்வின்போது பாடசாலையின் அதிபர் திரு. மு. சபேஸ்குமார் அவர்களும், மாணவர்களைத் திறம்பட வழிநடத்திய பொறுப்பாசிரியர்களான திரு. செ. தேவகுமார், திரு. த. யுதர்சன் ஆகியோருடன் இணைந்து சாதனை படைத்த மாணவர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன், இவ்விருதுகளையும் பெற்றுக்கொண்டனர்.

தேசிய மட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்ற பட்டிருப்பு தேசிய பாடசாலையின் அதிபர், வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்குக்கும், கல்விச் சமூகத்தினரும் பொதுமக்களும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 
பாடசாலை சமூகத்தினர் தொடர்ச்சியாக ஆய்வு நடவடிக்கைகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறை விரிவுரையாளர்களுக்கு தமது விசேடமான நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.