திருகோணமலை மதுபானசாலை கொள்ளையில் சிக்கிய 54, 61 வயது நபர்கள் – ஒருவர் பொலிஸ் சார்ஜென்ட்





திருகோணமலை - அநுராதபுரம் சந்தியிலுள்ள மதுபானசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து, பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற இருவரில் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (18) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், உப்புவெளி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த, கிளிபுஞ்சிமலை பிரதேசத்திலுள்ள வெடிமருந்து களஞ்சியசாலையில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் 54, 61 வயதுடைய ஹக்மன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ரூ. 115,000 பணம், அவர்கள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள், T56 வகை துப்பாக்கி, அதற்குரிய 29 தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து செயற்பட்ட திருகோணமலை பொலிஸார் ஒரு சில மணித்தியாலங்களிலேயே சந்தேகநபர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தற்காலிக தங்குமிடமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.