
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி, அவருக்கு கருணை வழங்குமாறு இலங்கையின் ஐந்து ஊடக அமைப்புகள் சவூதி அரேபிய தலைமையிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
செப்டெம்பர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சவூதி அரேபியாவின் நீதித்துறை நடைமுறைகளை முழுமையாக மதிப்பதாக தெரிவித்துள்ள ஊடக அமைப்புகள், அனோஜனின் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் கருணையும் இரக்கமும் காட்டுமாறு கோரியுள்ளன.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக அமைப்புகளாக, அனைத்து மதங்களுக்கும் மரியாதை, மத நல்லிணக்கம், பொறுப்பான கருத்து வெளிப்பாடு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கருணை, மன்னிப்பு, மனந்திரும்புதல் மற்றும் இரக்கம் ஆகியவற்றுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தையும் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உயர்மட்ட இராஜதந்திர முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதுடன், கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட மற்றும் மனிதாபிமான வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.
அனோஜனுக்கு கருணை வழங்கப்படுவது இலங்கை மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்பதுடன், இலங்கை–சவூதி அரேபியா இடையிலான நீண்டகால நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டுக் கோரிக்கையை Free Media Movement, South Asian Women in Media, Sri Lanka Working Journalists Association, Tamil Media Alliance மற்றும் Sri Lanka Muslim Media Forum ஆகிய ஐந்து ஊடக அமைப்புகள் விடுத்துள்ளன.




.jpg)



.jpg)
.jpg)


.jpg)