7 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் மூன்று தாய்லாந்து பெண்கள் கைது


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், 7 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூன்று தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்டெம்பர் 20ஆம் திகதி அதிகாலை பாங்கொக்கிலிருந்து வந்த 38 வயதுடைய தாய்லாந்து பெண்ணிடமிருந்து 3 கிலோ 220 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹஷீஷ் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு நடவடிக்கையில், பாங்கொக்கிலிருந்து வந்த 31 மற்றும் 36 வயதுடைய இரு தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரிடமிருந்து 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹஷீஷ் கைப்பற்றப்பட்டதாகவும், மற்றைய பெண் குற்றத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு நடவடிக்கைகளிலும் மொத்தமாக 7 கிலோ 686 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.