
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர்களின் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் காணொளிகள் (AI-generated Child Sexual Abuse Material – CSAM), சிறுவர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் இணையத்தில் பரப்பப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அல்லது காணொளிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நிழற்படங்களைக் கொண்டிருந்தன. எனினும், தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு சிறுவனின் அல்லது சிறுமியின் சாதாரண புகைப்படத்தைப் பயன்படுத்தி, அவர்கள் நிர்வாணமாகவோ அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவோ தோற்றமளிக்கும் தத்ரூபமான போலிப் படங்களை உருவாக்க முடியும்.
இது சிறுவர்களின் தனியுரிமைக்கும் மனநலத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் அறிகுறிகள்
இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்கள் ஏதேனும் அச்சுறுத்தல் அல்லது அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், பின்வரும் அறிகுறிகள் தென்படக்கூடும்:
கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியைப் பயன்படுத்தும்போது ஒருவர் அருகில் வந்தால், உடனடியாகத் திரையை மூடுவது அல்லது மறைப்பது.
சமூக ஊடகக் கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளைத் திடீரெனக் கடுமையாக்குவது அல்லது புதிய கணக்குகளை உருவாக்குவது.
குற்ற உணர்வு, கவலை அல்லது மன உளைச்சலுடன் காணப்படுவது; தனிமையில் இருக்க முயற்சிப்பது.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
இணையத்தில் காணப்படும் ஆபத்துகள் மற்றும் அறிமுகமற்ற நபர்களுடன் தொடர்புகொள்வதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து சிறுவர்களுடன் நட்புறவுடன் கலந்துரையாடுங்கள்.
சிறுவர்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடும்போது, ‘Public’ என்பதற்குப் பதிலாக ‘Private’ தனியுரிமை அமைப்பைப் பயன்படுத்துங்கள்.
தங்களது புகைப்படங்களை அறிமுகமற்ற நபர்களுடன் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்குமாறு சிறுவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.
சிறுவர்கள் பயன்படுத்தும் இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன், அவர்களின் இணையப் பயன்பாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான தொழில்நுட்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.
சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான முதல் படி விழிப்புணர்வே எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் வேகத்திற்கு ஏற்ப பெற்றோர்களும் தமது அறிவைப் புதுப்பித்துக்கொண்டு, சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.









.jpg)

.jpg)