சனிக்கிழமை (19) மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவில் தொழில் நிமித்தமாக சென்று பணியாற்றிய அம்பாறை மாவட்டம் நற்பட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த சிவராஜா அனோஜனது நிலைமை தொடர்பாக அண்மையில் வேதனையான தண்டனை தொடர்பான விடயம் பரவலாகியுள்ளது.
இந்த விடயத்தில் இலங்கை அரசு தனது முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும், தனது மகனுக்கு நேர்ந்துள்ள விடயத்தில் இருந்து தண்டனையை குறைப்பதற்கு அல்லது விடுவிப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கையை மனிதாபிமான அடிப்படையில் செய்யுமாறு கோரி ஏற்கனவே ஜனாதிபதிக்கு நாம் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெப்பமிட்டு எங்களது வேண்டுகோளை விடுத்திருக்கின்றோம்.
அதற்குரிய பதில் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் அனோஜனின் தண்டனை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களிடத்திலும் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.
அவர்களும் இந்த விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அதனை விரைவாக எடுக்கவேண்டும் என நாம் கேட்கின்றோம்.
எனவே தமிழ் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் என்ன, சிங்கள மொழி பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் என்ன, மனிதநேய அடிப்படையில் அணுகுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதிவுதீன் அவர்கள் அனோஜனின் வீட்டுக்குச் சென்று பெற்றோரது கருத்துக்களை கேட்டறிந்து கொண்டது மட்டுமல்லாது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து இந்த அனோஜனின் தண்டனையை குறைப்பதற்கு அல்லது விடுவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறியிருந்தார். இதனை நாம் நன்றியுடன் பார்க்கின்றோம்.
முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களும் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டு இருக்கின்றார். அதுபோல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இவ்விடயம் தொடர்பில் அக்கறையாக செயற்படுகின்றார்கள். வெளிவிவகார அமைச்சும் இந்த விடயத்தில் கவனமாக செயற்பட வேண்டும். இந்த விடயத்தை ராஜதந்திர ரீதியாக கையாளவேண்டும்.
ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சு, அதற்குரிய அதிகாரிகள், சவூதி அரசோடு தொடர்பு கொண்டு மனிதநேயமான பணியினை கருணை அடிப்படையில் செய்யவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம். அவரது குடும்ப நிலை எமக்கு ஏற்பட்டால் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம். ஆகவே சிவராஜா அனோஜன் தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்ட கருத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை.
அவரது அக்கருத்து உண்மையில் கண்டிக்கப்படவேண்டியதுதான். அவருக்கும் இன்னும் ஒரு இஸ்லாமிய இளைஞருக்கு ஏற்பட்ட கருத்து மோதல் தற்போது இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. எனவே சிவராஜா அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு என்பது இலங்கை மக்கள் எதிர்பார்க்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது.
எனவே இஸ்லாமிய சகோதரர்கள், அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருடைய விடுதலைக்கு அவருடைய தண்டனை குறைப்புக்கான வழிவகைகளை செய்யவேண்டும் என நான் மனிதாபிமான அடிப்படையில் வேண்டுகின்றேன்.
எனவே இவ்வாறான கருத்துக்களை இனிமேல் வெளியிடக் கூடாது என்பதை எமது இளைஞர்கள் மத்தியில் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கின்றேன். அனோஜனின் விடயத்தில் மனிதாபிமானத்துடன் செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அனைவரிடமும் கோரிக்கையாக முன்வைக்கின்றேன்.
இந்த நாடு அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டதற்கு கடந்த கால ஆட்சி முறையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளும் பொறுப்புள்ள அமைச்சர்கள், ஜனாதிபதிகளாக இருக்கலாம், அவர்களோடு உடன் செயற்பட்ட சில அதிகாரிகளும் காரணமாக இருந்திருக்கின்றார்கள்.
எனவே பொருளாதார குற்றம் இழைக்கப்பட்டது என்பதற்கு உயர் நீதிமன்றம் கூட தீர்ப்பளித்து இருக்கின்றது. பொருளாதார குற்றவாளிகள் யார் என்பதையும் அடையாளப்படுத்தி இருக்கின்றது. எனவே அந்தக் குற்றம் இழைத்தவர்கள் காரணமாக இலங்கையில் உள்ள சகல மக்களும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நீதியை வழங்கவேண்டிய பொறுப்பு இப்போது அரசுக்கு இருக்கின்றது. எனவே குற்றம் இழைத்தவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தால் என்ன, அதிகாரிகளாக இருந்தால் என்ன, அதற்கு உடந்தையாக இருந்த அனைவருக்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது கருத்து.
இக்காலத்தில் நடைபெறுகின்ற உண்மையான கைதுகள் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக பாய்ச்சப்படுகின்ற சட்ட நடவடிக்கையை நாம் எப்போதும் வரவேற்கின்றோம். இது பழிவாங்குகின்ற செயற்பாடுகள் அல்ல. அந்தக் காலத்தில் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் என்பது சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமமாகக் கருதப்படுவதால் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமர்களாக இருந்தால் என்ன, அமைச்சர்களாக இருந்தால் என்ன, மேட்டுக்குடி வர்க்கத்தின் இழவல்களாக இருந்தால் என்ன, இந்த விடயத்தில் அரசு சரியான நடவடிக்கை எடுக்கின்றபோது நாங்கள் அவற்றுக்கு பக்கபலமாக இருக்க விரும்புகின்றோம். ஆனால், இன ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கடந்த காலத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இழுபறியில் இருந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.






.jpg)



.jpg)

.jpg)
.jpg)