கர்ப்பிணிப் பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை : சந்தேகநபர் கைது



கற்பிட்டி, பால குடாவ பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (03) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்த பெண், கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பால குடாவ, கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து வேறு நபரொருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையில், குறிப்பிட்ட நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.