பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பிய சொகுசு கார் பன்னலவில் சுற்றிவளைப்பு


கிரிவுல்லவில் பொலிஸாரால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்ட நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் தப்பிச் சென்ற சொகுசு கார் ஒன்று பன்னல நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அந்த காரை செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிரிவுல்ல பகுதியில் வைத்து இந்த காரைச் சோதனையிடுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை நிறுத்துமாறு சாரதிக்கு சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும் அதனையும் மீறி அந்த கார் நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, காரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், வாகனத்தை நிறுத்துமாறு சாரதிக்கு மீண்டும் மீண்டும் சமிக்ஜை செய்தனர்.

அவர் பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் காரைச் செலுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இருப்பினும் அவர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பண்ணல நகரத்தில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மற்றும் மேலும் சில வாகனங்களைக் குறுக்கே நிறுத்தி காரை மறித்து நிறுத்த பொலிஸாரால் முடிந்துள்ளது.

அங்கு வாகனம் நிறுத்தப்பட்ட போதிலும், சாரதி காரின் கதவுகளைத் திறக்காததால், பொலிஸ் உத்தியோகத்தர்கள் டி-56 துப்பாக்கிகளைக் காண்பித்து கதவைத் திறக்குமாறு கட்டளையிட்ட போதிலும், சாரதி அதனை மறுத்துள்ளார்.

இதன்காரணமாக, பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரின் இடதுபுற முன் கதவுக் கண்ணாடியைத் துப்பாக்கியால் அடித்து நொறுக்கிய பின்னரே சாரதி கதவைத் திறந்துள்ளார்.

இதற்கமைய, காரில் இருந்த சாரதி மற்றும் மேலும் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சாரதியிடம் இருந்த சிறியளவிலான போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிரிவுல்ல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் கிரிவுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.