
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அறிந்திருந்தும் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை ராஜபக்ஷ குடும்பத்தினர் முற்றுமுழுதாக மறுத்துள்ளனர்.
விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ அழைப்பாணையும் கிடைக்கவில்லை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷிராந்தி ராஜபக்ஷ, அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (16) புதன்கிழமை அதிகாலை 12.50 முதல் 1.10 மணியளவில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறுவதற்கான நுழைவாயில் அருகே வைத்தே, விமான நிலைய அதிகாரி ஒருவரால் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிவித்தல் கடிதம் திடீரென அவரிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாரான பின்னரே குறித்த அறிவித்தல் அவரிடம் வழங்கப்பட்டதாகவும், எனவே முன்னதாகவே அழைப்பாணை கிடைத்திருந்தும் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் தவறானவை எனவும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 109(6) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில், ‘சிரிலிய சவிய’ நிதிக் கணக்கு தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் 10 மில்லியன் ரூபாய் நிதியை ‘சிரிலிய சவிய’ கணக்குக்கு மாற்றி முறைகேடு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








.jpg)


.jpg)